மேலூர் அருகே மீண்டும் புவியியல் ஆய்வு - டங்ஸ்டன் குறித்து கிராம மக்கள் அச்சம்
மதுரை, 21 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு, வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனத
புவியியல் ஆய்வு


மதுரை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு, வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது.

இதற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், கடந்த 2025 ஜனவரி 23-ஆம் தேதி அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், மேலூர் அருகே அய்யாபட்டி ஊராட்சிக்குட்பட்ட மலம்பட்டி பகுதியில் உள்ள கரும்பாறைகளில் கடந்த சில நாட்களாக இந்திய புவியியல் ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது, கொட்டாம்பட்டி, மேலூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, திருப்பத்தூர், திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு உத்தரவின்பேரில் பாறைகளின் தன்மை மற்றும் தொன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது நடைபெறும் புவியியல் ஆய்வு மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஆய்வின் நோக்கம், எந்த கனிமம் தொடர்பான ஆய்வு, அனுமதி மற்றும் ஆய்வுப் பரப்பளவு உள்ளிட்ட விவரங்களை மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, ஆய்வு தொடர்பாக மேலூர் வட்டாட்சியர் வசந்திடம் கேட்டபோது, கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆய்வு குறித்து உரிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam