விநாயகர் சிலை கரைப்பின் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
மும்பை , 21 செப்டம்பர் (ஹி.ச.) மராட்டிய மாநிலம் மும்பையில் விநாயகர் சிலை கரைப்பதற்காக செயற்கை குளத்தில் இறங்கிய 19 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சில நாட்களாக வெகுவிமரிசையாக கொண்ட
A


மும்பை , 21 செப்டம்பர் (ஹி.ச.)

மராட்டிய மாநிலம் மும்பையில் விநாயகர் சிலை கரைப்பதற்காக செயற்கை குளத்தில் இறங்கிய 19 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சில நாட்களாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

விழாவின் நிறைவையொட்டி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இயற்கை நீர்நிலைகள் இல்லாத இடங்களில் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டன.

அந்த வகையில், மும்பை ஷியாம் நகர் பகுதியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக செயற்கை குளம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை அந்த குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு, பின்னர் குளம் மூடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த ரோகித் ரதோர் (19) என்பவர் விநாயகர் சிலையை கரைப்பதற்காக செயற்கை குளத்திற்குள் இறங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார வயர் ஒன்று குளத்திற்குள் விழுந்ததில் தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் சிக்கிய ரோகித் ரதோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA