Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாகக் கூறி, யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக தமிழக அரசின் கனிம வளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு, ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினரும், பல் மருத்துவருமான டி.கே.பிரபு, தமிழக அமைச்சரவையில் கனிம வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், தமக்கு எதிராக யூடியூபர் மாரிதாஸ் சமூக வலைதளங்களில் பொய்யான மற்றும் ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாரிதாஸ் மீது ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி, அமைச்சர் டி.கே.பிரபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து, வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ