எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமா? – உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதே தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமா என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழு
High court


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதே தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமா என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் சுதன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தல் செலவை அவர்களிடமே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரு எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்தால் அது குறித்து கேள்வி எழுப்பப் போவதில்லை என்றும், ஆனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை தேவை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேர்தல் ஆணையத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிமன்றம், முந்தைய தேர்தலை நடத்துவதற்காக செய்யப்பட்ட செலவு உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற முடியுமா? என கேள்வி எழுப்பியது.

மேலும், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து அதன் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலையில், அதற்கான நிதிச்சுமை தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு பதவியை ராஜினாமா செய்யும் உரிமை இருப்பதாகவும், அதேநேரத்தில் அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதை தள்ளிவைத்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ