நாகை அருகே கட்சி மாறிய 12 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்
நாகப்பட்டினம், 21 செப்டம்பர் (ஹி.ச.) நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஜீவா நகர் காலனி தெருவில், திமுகவில் இருந்து தவெக மற்றும் பாஜகவில் இணைந்த 12 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதியில்
மாவட்ட ஆட்சியர்


நாகப்பட்டினம், 21 செப்டம்பர் (ஹி.ச.)

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஜீவா நகர் காலனி தெருவில், திமுகவில் இருந்து தவெக மற்றும் பாஜகவில் இணைந்த 12 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பெரும்பாலானோர் திமுகவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவில் இருந்து விலகி தவெக மற்றும் பாஜகவில் இணைந்த 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை, வீட்டு விசேஷங்கள் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க விடாமல் ஒதுக்கி வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், தங்கள் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளிலும் தங்களை சேர்க்காமல் புறக்கணிப்பதாக கூறி, தலைஞாயிறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இதுவரை தீர்வு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, கும்பாபிஷேக பணிகளில் தங்களை தொடர்ந்து புறக்கணிப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கட்சி மாறிய ஒரே காரணத்திற்காக தங்களை ஒதுக்கி வைப்பதாகவும், ஏற்கனவே ஊர் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் விழாக்களிலும் பங்கேற்க விடவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

தங்களை கோவில் நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிப்பதுடன், தங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, யாருக்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும், யாரையும் ஒதுக்கி வைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், மாதந்தோறும் நடைபெறும் கிராமக் கூட்டங்களிலும், கோவில் திருப்பணி தொடர்பான கூட்டங்களிலும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தாங்களாகவே பங்கேற்கவில்லை எனவும் கூறினர்.

மேலும், கோவில் நிர்வாகக் குழுவில் அவர்களது தரப்பில் 4 பேர் இடம்பெற்றுள்ளதாகவும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு காரணமாக கும்பாபிஷேக பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாகவும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பினரும் இணைந்து செயல்படும் வகையில், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam