நேபாள காட்டாற்று வெள்ளத்தில் 49 தமிழர்களின் நிலை என்ன? -உறவினர்கள் போராட்டம்
செங்கல்பட்டு, 21 செப்டம்பர் (ஹி.ச.) நேபாளத்தில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 தமிழர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டம்


செங்கல்பட்டு, 21 செப்டம்பர் (ஹி.ச.)

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 தமிழர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த 14ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து நேபாளம் வழியாக கைலாஷ் யாத்திரைக்கு 49 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரும் இடம்பெற்றுள்ளார்.

யாத்திரையை முடித்த பின்னர் நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் குடியேற்ற நடைமுறைகளை மேற்கொண்டிருந்தபோது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் குடியேற்ற அலுவலக கட்டிடமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மோசமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால், ராஜாராம் உள்ளிட்ட 49 தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

49 தமிழர்களின் நிலையை உடனடியாக கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P