வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
தமிழ்நாடு, 21 செப்டம்பர் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் நடை
முதலமைச்சர்


தமிழ்நாடு, 21 செப்டம்பர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

மேலும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி மூலம் கூட்டத்தில் இணைந்து, தங்களது மாவட்டங்களில் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து விளக்க உள்ளனர். குறிப்பாக மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள இடங்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டிய பகுதிகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது.

மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேவையான உபகரணங்கள், முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் மீட்புப் படையினரை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள பகுதிகளில் மீட்புக் குழுக்களை முன்கூட்டியே நிறுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதேபோல், நிவாரண முகாம்களில் குடிநீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

இதனிடையே, பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாருதல், ஆகாயத் தாமரையை அகற்றுதல், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மழைக்காலங்களில் மின்விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் சேதமடைந்த அல்லது வலுவிழந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கோபுரங்களை ஆய்வு செய்து தேவையான சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்வது தொடர்பாகவும் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P