வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் செயலுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம்
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) சென்னையில் தலைமை காவலர் ஒருவர் தனது வளர்ப்பு மகளை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெ
வானதி


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னையில் தலைமை காவலர் ஒருவர் தனது வளர்ப்பு மகளை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தந்தை–மகள் உறவின் உன்னதத்தையே கெடுக்கும் வகையில் காவலர் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே தனது வீட்டிலேயே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது, “வேலியே பயிரை மேய்ந்தது போல்” இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் பெண்கள் தொடர்ந்து கண்ணீர் சிந்தும் நிலை தொடர்வதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல் துறையைச் சேர்ந்தவரே இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது வெட்கக்கேடானது என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வழக்கமாக பதிவாகும் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதை மட்டும் சாதனையாகக் கூறுவது எப்படி பொருத்தமாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்காக செயல்படும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் பணிகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினந்தோறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தவெக அரசு நிர்வாகத் திறனை இழந்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P