Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 21 செப்டம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் நைனாபுரம் காலனி 1-வது தெருவைச் சேர்ந்த முனியாண்டியின் மகன் வெள்ளைப்பாண்டி (61).
இவர் கடந்த 10-ம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தார்.
இதையடுத்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று 20-ம் தேதி வெள்ளைப்பாண்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அன்றைய தினம் மாலை அவருக்கு ஊசி மருந்துகள் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு
உயிரிழந்தார்.
செவிலியர்கள் செலுத்திய ஊசியின் விளைவாகவே வெள்ளைப்பாண்டி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி 3 அரசு மருத்துவர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பொது மருத்துவர் முத்துசாய்ராம், அறுவை சிகிச்சை மருத்துவர் பார்த்திபன் மற்றும் பொது மருத்துவர் கருப்பசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் வெள்ளைப்பாண்டியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து, அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் காளிராஜ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam