Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 21 செப்டம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாநகராட்சியின் இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட 3 வார்டுகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களை மேற்பார்வையாளர்கள் கொத்தடிமைகள் போல் நடத்துவதாகவும், தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்து வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான பணிச்சுமை, உரிய ஓய்வு மறுக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து ஈரோடு சம்பத் நகர் பகுதியில் ஒன்று திரண்ட தூய்மைப் பணியாளர்கள், குப்பைகளை அகற்றும் பணி உள்ளிட்ட தங்களது அன்றாட பணிகளை புறக்கணித்து இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.
தேங்கியுள்ள குப்பைகளால் அப்பகுதிகளில் ஈ மற்றும் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பல இடங்களில் துர்நாற்றம் வீசுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவது குறித்து பணியாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b