Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 228 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் சுகாதாரமற்ற சூழல் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் விளைவாக டெங்கு பாதிப்பு சடுதியாக உயர்ந்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகள், நிலவேம்பு கசாயம் விநியோகம் மற்றும் மருத்துவ முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும், கொசு விரட்டிகளை பயன்படுத்துவதும், சுத்தமான குடிநீரை பருகுவதும் அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b