சபாநாயகரை அவதூறாக பேசிய வழக்கு- பி.ஆர்.எஸ். எம்.எல்.சி.க்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
ஐதராபாத் , 21 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் கடம் பிரசாத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி.க்கள் தாதா மது, நவீன் ரெட்டி ஆகியோருக்கு தெலுங்கானா ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உ
A


ஐதராபாத் , 21 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் கடம் பிரசாத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி.க்கள் தாதா மது, நவீன் ரெட்டி ஆகியோருக்கு தெலுங்கானா ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சபாநாயகரை அவதூறாக பேசியதுடன், பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் இருவர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்களை கைது செய்து காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனை எதிர்த்து தாதா மது, நவீன் ரெட்டி தரப்பில் நாம்பள்ளி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கோர்ட்டு, இருவரையும் கைது செய்வதற்கும் காவலில் எடுப்பதற்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து போலீசார் தெலுங்கானா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் நாகேஸ்வரராவ், அரசியலமைப்பு பதவியான சபாநாயகர் பதவியில் இருப்பவரை எம்.எல்.சி.க்கள் மிகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் வாதிட்டார்.

எனவே, கைது மற்றும் காவலை தடுத்த நாம்பள்ளி கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இருதரப்பு வாதங்களையும், ஆரம்பகட்ட அறிக்கைகளையும் பரிசீலித்த ஐகோர்ட்டு, தாதா மது மற்றும் நவீன் ரெட்டி ஆகியோர் தங்கள் தரப்பு விளக்கத்தை விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து இருவருக்கும் நோட்டீஸ் பிறப்பித்த ஐகோர்ட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA