Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 21 செப்டம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டம் போடி பேருந்து நிலையம் அருகே ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி மற்றும் பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 6,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள ஸ்டேஷனரி கடைக்குள் காளை மாடு ஒன்று புகுந்துள்ளது. அங்கிருந்த பொருட்களை மாடு முட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க முயன்ற கடை ஊழியர் கருப்பையாவை, காளை மாடு ஆக்ரோஷமாக முட்டித் தூக்கி வீசியுள்ளது. இதில் லேசான காயமடைந்த கருப்பையா, அங்கிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
போடி நகரில் சிலர் தங்களது கால்நடைகளை கட்டுப்பாடின்றி பொதுவெளியில் சுற்றித்திரிய விடுவதால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே கால்நடைகள் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகள் அருகே இச்சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பகல் நேரங்களில் மாணவர்கள் செல்லும் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படக்கூடும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, போடி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, கட்டுப்பாடின்றி பொதுவெளியில் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதுடன், கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்காத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam