விநாயகர் சிலை கரைப்புக்கு பின் குவிந்த டன் கணக்கிலான கழிவுகள் - பட்டினப்பாக்கத்தில் தூய்மைப் பணி தீவிரம்
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச) சென்னை பட்டினப்பாக்கம் லூப் ரோடு கடற்கரை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான விநாயகர் திருவுருவச் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடற்கரை எங்கும் குவிந்து கிடந்த டன் கணக்கிலான பூஜைப்
Tonnes of waste accumulated after Vinayagar idol immersion


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச)

சென்னை பட்டினப்பாக்கம் லூப் ரோடு கடற்கரை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான விநாயகர் திருவுருவச் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடற்கரை எங்கும் குவிந்து கிடந்த டன் கணக்கிலான பூஜைப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விழா முடிந்த பிறகு கடற்கரையின் மணற்பரப்பு முழுவதும் சிதிலமடைந்த சிலைகளின் பாகங்கள், சாயம் பூசப்பட்ட களிமண் துகள்கள், வாடிய மலர் மாலைகள், பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட துணிகள், தேங்காய், தெர்மாகோல் தட்டுகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் என ஏராளமான திடக்கழிவுகள் குவிந்து கிடந்தன. இதனால் கடற்கரையின் இயற்கை அழகு பாதிக்கப்பட்டதோடு, கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மைப் பணி நிறுவனங்கள் இணைந்து சிறப்பு தூய்மை இயக்கத்தை தொடங்கியுள்ளன.

இதற்காக சென்னை மாநகராட்சியின் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உதவியாக நவீன கடற்கரை மணல் சுத்திகரிப்பு இயந்திரங்கள், ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு, அலையோரப் பகுதிகள் மற்றும் மணற்பரப்பில் புதைந்து கிடந்த கழிவுகள் கூட சுழற்சி முறையில் அகற்றப்பட்டு வருகின்றன.

சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு உரிய கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த அரசு முயற்சிக்கு பொதுமக்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வுடன் கூடிய தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்கரையை பழைய நிலைக்கு மீட்டெடுக்கும் இப்பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடல் வளத்தையும் கடற்கரையின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் பிளாஸ்டிக் கழிவுகளை மணலில் வீசாமல், கடற்கரை நெடுகிலும் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்டி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.

Hindusthan Samachar / vidya.b