அக்.2 முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் - 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம்
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச) மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைம
Jn


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச)

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர், தமிழகத்தின் எந்தப் பகுதியில் வசிக்கும் மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தங்களுக்கான வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையின் அடிப்படையில், மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2-ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் மாநகர மற்றும் நகர்ப்பகுதிகளில் இயக்கப்படும் விரைவு, எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் ஆகியவற்றுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதன்படி, மொத்தம் 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தம் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள், அதாவது 69 சதவீத பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும்.

அதேபோல், மொத்தம் 1,94,649 பேருந்து நடைகளில் 1,65,312 நடைகள், அதாவது 85 சதவீத நடைகள் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளன.

இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடன் (ETM) இணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் செப்டம்பர் 25-ம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொடர்ந்து, செப்டம்பர் 27-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கு எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும்.

இதனால் மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காகவும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ