வயிற்று வலியால் துடித்த பெண்ணை 7 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்
தர்மபுரி, 21 செப்டம்பர் (ஹி.ச.) தர்மபுரி மாவட்டத்தின் வட்டுவனஹள்ளி வனப் பகுதியில் உள்ள அலகட்டு மலை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல முறையான தார் சாலை கிடையாது. ஆரம்ப சுகாதார நிலையம்
வயிற்று வலியால் துடித்த பெண்ணை 7 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்


தர்மபுரி, 21 செப்டம்பர் (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டத்தின் வட்டுவனஹள்ளி வனப் பகுதியில் உள்ள அலகட்டு மலை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல முறையான தார் சாலை கிடையாது.

ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது. போக்குவரத்து வசதியும் இல்லை. கரடுமுரடான மலைப்பாதை, அடர்ந்த காடு, காட்டாறுகளை கடந்து தான் மக்கள் வெளி உலகத்திற்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோய்வாய்ப்படுபவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில், அலகட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை. வாகனங்கள் செல்ல சாலையும் இல்லை.

இதனால் செய்வதறியாது தவித்த கிராம மக்கள், மூங்கில் கம்புகளால் டோலி போன்று கட்டி, அந்தப் பெண்ணை அதில் படுக்க வைத்து தூக்கிச் சென்றுள்ளனர்.

இரவு நேரம் என்பதால், டார்ச் லைட் வெளிச்சத்தில், காட்டாறுகளையும், பாறைகள் நிறைந்த கரடுமுரடான பாதையையும் கடந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று, பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது முதல் முறை அல்ல. அலகட்டு மலை கிராமத்தில் இதுபோன்று நோயாளிகளை டோலி கட்டி தூக்கிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. சாலை வசதி, குடிநீர், மருத்துவம், பேருந்து வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இந்த மக்கள் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அலகட்டு மலை கிராமத்திற்கு தார் சாலை அமைத்து, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Hindusthan Samachar / vidya.b