Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மாணவர்களின் நலன் கருதி செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் காலை உணவுத் திட்டம் நாளை முதல் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வரவேண்டும், அவர்களின் கற்றல் திறன் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
மேலும் மாணவர்களுக்கு தினமும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படாமல், அவர்களை கவரும் வகையில் சுவையான, சத்தான புதிய உணவு வகைகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இனி மாணவர்களுக்கு புதிய வகை உணவுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், புதிய தலைமைச் செயலகம் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று தெரிவித்தார்.
அதேபோல் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களின் இடமாறுதல் கோரிக்கைகள் இனி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் வகையில், ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b