Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க ஒப்புதல் அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க விதிகளின்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது.
நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதைக் காரணமாகக் குறிப்பிட்டு, தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஒப்புதல் அளித்து சங்கங்களின் பதிவாளர் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், கட்டிடப் பணிகளைக் காரணம் காட்டி நிர்வாகிகளின் பதவிக்காலம் சட்டவிரோதமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல் எந்த விசாரணையும் நடத்தாமல் பதவிக்கால நீட்டிப்புக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், உத்தரவை ரத்து செய்து, நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதே கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மனுதாரர் தற்போது இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு தமிழக அரசு மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam