Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், சார்பதிவாளர் சுஜாதா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இடைத்தரகர்கள் மூலம் வரும் நபர்களின் பணிகள் விரைவாக நடைபெறுவதாகவும், நேரடியாக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் பணிகள் தாமதப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருமணப் பதிவு, பெயர் மாற்றம், அதிகார ஆவணம், செட்டில்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிகார ஆவணம் பதிவு மறுக்கப்பட்டதாகவும், அது தொடர்பாக அரசு ஆணை இருந்தபோதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இளமாறன் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், புகார்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நீண்ட காலமாக அலைக்கழிக்கப்படுவதாகவும், 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆலந்தூர் சார்பதிவாளர் சுஜாதா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் பணிகள் வெளிப்படையாகவும், விதிமுறைகளின்படியும், காலதாமதமின்றியும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam