பித்தாபுரத்தில் ரூ.1,500 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் -துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உறுதி
காக்கிநாடா , 22 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் 2-வது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொகுதியை மாநிலத்திலேயே மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில்
A


காக்கிநாடா , 22 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் 2-வது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

தொகுதியை மாநிலத்திலேயே மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சேப்ரோலுவில் உள்ள சீதாராமசாமி கோவிலுக்கு சென்ற பவன் கல்யாண், ஏகாதசியையொட்டி சாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

பின்னர் கோவில் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.90 லட்சம் நிதியில் புதிதாக கட்டப்பட்ட தேர் மண்டபம், யாகசாலை, காலட்சேப மண்டபம், அன்னதான கூடம் ஆகியவற்றின் பணிகளை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து, யு.கொத்தப்பள்ளி மண்டலத்தில் ரூ.9.59 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட நாகுலப்பள்ளி ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை பவன் கல்யாண் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 52 குடியிருப்புகளை சேர்ந்த சுமார் 97 ஆயிரம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும்.

கொண்டேவாரம் பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.120 கோடி கடனுதவிக்கான காசோலைகளை பவன் கல்யாண் வழங்கினார்.

மேலும், பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள், மீனவர்களுக்கு உயிர்காக்கும் கவச உடைகள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார்.

பித்தாபுரம் நகரில் நிரந்தர குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், ரூ.225 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.34 கோடியில் கோவில்கள் புனரமைப்பு, ரூ.323 கோடியில் உப்பாடா கடலோர பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய திட்டப் பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருவதாக பவன் கல்யாண் தெரிவித்தார்.

இந்த நிலையில், தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் பவன் கல்யாணுக்கு ஏர் கலப்பையை நினைவுப் பரிசாக வழங்கினர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA