Enter your Email Address to subscribe to our newsletters

அனந்தபுரம் , 22 செப்டம்பர் (ஹி.ச.)
ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைக்கூட விட்டுவைக்க மாட்டோம் என்று ஆந்திர மாநில மந்திரி நாரா லோகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.
அவர்கள் ஆந்திராவில் இருந்தாலும், அந்தமான் அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் கண்டுபிடித்து சிறையில் அடைப்போம் என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
என் மீது கோபம் இருந்தால் நேரடியாக என்னிடம் வந்து பேசுங்கள்.
அதற்காக தேதி, நேரத்தை முடிவு செய்து நேருக்கு நேர் பேசலாம். டி.எஸ்.சி., ஏ.பி.பி.எஸ்.சி. தேர்வுகள் மற்றும் கலப்பட மதுபானம் தொடர்பாகவும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் வைசிபி ஆட்சியில் ஒரு டி.எஸ்.சி. தேர்வுகூட நடத்தப்படவில்லை. ஒரு வேலைவாய்ப்பு கால அட்டவணையும் வெளியிடப்படவில்லை. ஆனால், சந்திரபாபு நாயுடு முதல் கையெழுத்தை டி.எஸ்.சி. தேர்வுக்காக போட்டார். அந்த தேர்வை தடுக்க வைசிபி தரப்பினர் சுமார் 300 வழக்குகளை தொடர்ந்தனர்.
இருப்பினும், கூட்டணி அரசு 150 நாட்களில் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமராவதியில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சந்திரபாபு நாயுடு மீது பொய் வழக்குகள் பதிவு செய்து 53 நாட்கள் சிறையில் அடைத்தனர். ஆனால், அவர் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்குகூட நிரூபிக்கப்படவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோதே நாங்கள் பயப்படவில்லை. இப்போது ஏன் பயப்பட வேண்டும்?” என்று நாரா லோகேஷ் கூறினார்.
தொண்டர்களுக்கு முக்கியத்துவம்
தெலுங்குதேசம் கட்சியில் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்களின் தியாகங்களை சந்திரபாபு நாயுடு ஒருபோதும் மறக்கமாட்டார்.
அவர்களுக்காக விபத்து காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை ரூ.175 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக லோகேஷ் தெரிவித்தார்.
கட்சி நிகழ்ச்சிகளில் சுறுசுறுப்பாக பங்கேற்று மக்களுக்காக பணியாற்றும் தொண்டர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படும். தாங்கள் மேற்கொள்ளும் கட்சி பணிகளை ‘மை டி.டி.பி.’ செயலியில் பதிவிட வேண்டும். மக்கள் மத்தியில் தொடர்ந்து பணியாற்றினால் பதவிகள் தானாகவே தேடி வரும்.
பணியாற்றாமல் பதவிகளை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.
ராப்தாடு தொண்டர்களுக்கு ஆதரவு
2019 முதல் 2024-ம் ஆண்டு வரை ராப்தாடு தொகுதியில் தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததாக லோகேஷ் குற்றம் சாட்டினார்.
அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். தன் மீது மட்டும் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக கூறிய அவர், கட்சி தொண்டர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே 80 சதவீத பொய் வழக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்பர் பென்னார் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக நீர்ப்பாசனத்துறை அமைச்சருடன் பேசி நிதி ஒதுக்கப்படும்.
ராப்தாடு பகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதலீடுகளை கொண்டு வருவதில் உள்ளூர் கட்சி நிர்வாகிகளும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் நாரா லோகேஷ் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA