பள்ளி மாணவர்கள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு
கள்ளக்குறிச்சி, 22 செப்டம்பர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக சமூக நீதித்துறை அமைச்சரும், மா
Minister Vanniarasu


கள்ளக்குறிச்சி, 22 செப்டம்பர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது.

இதில் தமிழக சமூக நீதித்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வன்னி அரசு கலந்து கொண்டு காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து மாதிரி பள்ளியின் மாணவர் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது சமையல் அறையில் சமைக்கப்பட்ட உணவை பரிசோதித்தார்.

பிறகு விடுதியில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு செய்த அவர், மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மாத்திரை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாணவர் சமுதாயம் இதற்கு பெரும் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளது.

மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிடும்போது நாங்கள் சத்துணவு சாப்பிட்ட காலம் நினைவுக்கு வந்தது. நாங்களும் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து வந்தவர்கள்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்தார்.

மாணவர்கள் நல்ல உணவு சாப்பிடும்போது ஆரோக்கியமாக உணர்வார்கள், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

அந்த அடிப்படையில் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உணவு வழங்குவதன் மூலம் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். இந்த அரசு மாதிரி பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

இது ஒரு நல்ல, வரவேற்கத்தக்க திட்டம். மாணவர்களோடு அமர்ந்து உணவருந்தியது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

மாவட்டத்தில் பள்ளிகளில் மழைநீர் தேங்குவதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமே என்ற கேள்விக்கு,

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தி, மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

மாணவர்கள் என்ன கோரிக்கை வைத்தார்கள் என்ற கேள்விக்கு,

பள்ளி அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம், சர்வீஸ் சாலை அமைத்து தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி விரைவில் பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN