Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மயிலை வேலு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டது குறித்து எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு உட்பட்ட பட்டினப்பாக்கத்தில், கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல், பட்டினப்பாக்கம் பகுதியை புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக தேர்வு செய்ததற்கான காரணம் எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது தன்னிச்சையான முடிவு எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ