Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச)
தமிழக அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள காந்தி கிராமம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
இந்த திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
இதன்மூலம் இதுவரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டத்தின் பயன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கிடைக்க உள்ளது.
தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக பயன்பெற உள்ளனர்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலை உணவை தவறவிடாமல் சத்தான உணவைப் பெறுவதுடன், அவர்களின் கல்வி மற்றும் உடல் நலனுக்கும் இந்த திட்டம் பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படுகிறது.
திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் மொத்த நிதி மதிப்பு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.
தொடக்க விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சாம்பார் உள்ளிட்ட காலை உணவுகளை முதல்வர் ஜோசப் விஜய் நேரடியாக பரிமாற உள்ளார்.
பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் சேர்ந்து காலை சிற்றுண்டியை முதல்வரும் அருந்த உள்ளார்.
இதன் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ