Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 22 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மையூர், சம்பாதிநல்லூர், அத்தியூர், சிதண்டி, பிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய வீரபாண்டியன்,
பொதுமக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைக்க சுகந்திக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து தெரிவித்த கருத்து தவறானது எனக் கூறிய அவர், கம்யூனிஸ்ட் கட்சியினர் எந்தக் காலத்திலும் கையூட்டு பெற்றதில்லை என்றும், கையூட்டு வாங்குவதை வேடிக்கை பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு நேரம் கிடைக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை புரட்டிப் பார்த்து படிக்க வேண்டும் என்றும், அதனை முதலமைச்சரிடமும் தெரிவிக்க வேண்டும் என்றும் வீரபாண்டியன் கூறினார். கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊழல் வழக்குகளில் சிக்கியதில்லை என்றும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது கட்சியின் முடிவு என்றும், கூட்டணியில் தாங்கள் இல்லை என்றும் கூறிய வீரபாண்டியன், ஆட்சியைக் கவிழ்க்கும் சிந்தனை தங்களுக்கு இல்லை எனத் தெரிவித்தார். ஆட்சிக்கு நிர்பந்தம் கொடுப்பவர்களாக தாங்கள் இருக்கவில்லை என்றும் கூறினார்.
அரசின் பக்கம் அல்லாமல் உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் பக்கம் தாங்கள் இருப்பதாகவும், மதச்சார்பின்மை மற்றும் ஏழை, உழைக்கும் மக்களின் நலனில் அரசு தவறும்போது எதிர்த்து குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் நிதானமாகவும் பொறுப்புடனும் பேச வேண்டும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது ஒருமுறைக்கு இருமுறை நிதானித்து கூற வேண்டும் என்றும் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P