கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம் - முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.) கூவம் ஆற்றை அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள மறுசீரமைப்புப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில்
Coo


சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

கூவம் ஆற்றை அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள மறுசீரமைப்புப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப். 22) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூவம் ஆற்றின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசின் 2026-27 நிதிநிலை அறிக்கையில், சென்னை மாநகரின் நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில், கூவம் ஆற்றை இயற்கையான நிலைக்கு மீட்டெடுப்பதுடன், நீடித்த சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், திட்டத்தில் இடம்பெற உள்ள பல்வேறு வசதிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம், தரநிலைகளை உறுதி செய்யும் வகையில் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கான பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கிலோமீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றுப் பகுதிகளில், நடைபாதைகள், மிதிவண்டிப் பாதைகள், நதிக்கரை நடைபாதைகள், பார்வையிடும் தளங்கள், பசுமைப் பகுதிகள் மற்றும் சமூகப் பயன்பாட்டு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனுடன் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்வதற்கான கருத்துருவாக்கம் மற்றும் செயல் விளக்கத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

சென்னை மாநகரின் நதிச்சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளிகள் மற்றும் தேவையான வசதிகளை உருவாக்கும் நோக்கில், கூவம் ஆறு மறுசீரமைப்புப் பணிகளை பல்வேறு கட்டங்களாக ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறையுடன் முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / P YUVARAJ