Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் தொட்டி நீரை வெளியேற்றுவது தொடர்பாக எழுந்த தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி, மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள காமாட்சியம்மன் கோவில் பூசாரியாக ராமசாமி என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இவரது வீட்டிற்கு அருகே மகேஸ்வரன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், பூசாரி ராமசாமி தனது வீட்டுத் தண்ணீர் தொட்டியில் இருந்து நிரம்பி வழியும் நீரைச் சாலைக்குத் திருப்பி விட்டுள்ளார்.
இதனால், அருகே நடைபெற்று வரும் மகேஸ்வரனின் வீடு கட்டும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவானது.
இதனையடுத்து மகேஸ்வரனும், அவரது மனைவியும் பூசாரி ராமசாமியிடம் சென்று, தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறும் நீரைச் சாக்கடைக் கால்வாய்க்குத் திருப்பி விட்டால், சாக்கடையும் தூய்மையாகும்,எங்களது வீடுகட்டும் பணிகளுக்கும் இடையூறு இல்லாமல் இருக்கும் என்று நியாயமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த பூசாரி ராமசாமி, தம்பதியுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ராமசாமி, அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து மகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி மீது சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், ஆத்திரம் அடங்காமல் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து தம்பதியை வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது.
பூசாரி ராமசாமி தம்பதியைத் தாக்கி, மண்வெட்டியால் வெட்ட முயன்ற அதிர்ச்சி தரும் காட்சிகள் அங்கே இருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு சிறிய தண்ணீர் தகராறு, உயிர் பலி வாங்கும் அளவிற்குப் பெரிய அசம்பாவிதமாக மாறுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு, வன்முறையில் ஈடுபட்ட பூசாரி ராமசாமி மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J