Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் மற்றும் நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகராட்சி நிர்வாக அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையின்போது அலுவலகங்களில் உள்ள முக்கிய ஆவணங்கள், கோப்புகள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை மையமாகக் கொண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சோதனை அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனைகள் நிறைவடைந்த பின்னர் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ