Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி அமிர்தசரஸில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்த 3 இத்தாலியர்கள், அங்கிருந்து லுஃப்தான்சா விமானத்தில் முனிச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
டெல்லி வந்த பிறகு இந்தியாவை விட்டு வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான கட்டாய குடியுரிமை சோதனையை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால், அந்த நடைமுறை நடைபெறாமல் அவர்கள் சர்வதேச விமானங்களுக்கிடையேயான இணைப்பு பயணிகளுக்கான வழித்தடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அவர்கள் குடியுரிமை சோதனை நடைபெறும் பகுதியைத் தவிர்த்து சர்வதேச புறப்பாடு பகுதிக்குச் சென்று முனிச் செல்லும் விமானத்தில் ஏறியுள்ளனர்.
இந்த விமானம் அதிகாலை 1.45 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி ஏர் இந்தியாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதில், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளை அவர்களின் போர்டிங் பாஸில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாளத்தின் அடிப்படையில் முறையாகப் பிரித்து அனுப்ப வேண்டிய நடைமுறை பின்பற்றப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அமிர்தசரஸ்-டெல்லி பயணத்துக்கு அந்த 3 பேருக்கும் உள்நாட்டு பயணத்தைக் குறிக்கும் ‘D’ அடையாளம் கொண்ட போர்டிங் பாஸ் வழங்கப்பட்டிருந்ததாகவும், எனவே டெல்லியில் அவர்கள் உரிய குடியுரிமை சோதனையை முடித்த பின்னரே சர்வதேச புறப்பாடு பகுதிக்குச் செல்ல வேண்டியிருந்ததாகவும் அமைச்சகத்தின் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவர்கள் சர்வதேசத்திலிருந்து சர்வதேசத்திற்கு மாறிச் செல்லும் பயணிகளுக்கான I-to-I வழித்தடத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், அமிர்தசரஸிலேயே அவர்களுக்கு முனிச் செல்லும் அடுத்த விமானத்துக்கான போர்டிங் பாஸ் ஏன் வழங்கப்பட்டது, டெல்லியில் பயணிகள் சரியான வழித்தடத்தில் பிரித்து அனுப்பப்படாதது ஏன், அவர்களை யார் I-to-I பகுதி வழியாக அழைத்துச் சென்றது, ஏர் இந்தியா மற்றும் தரைக் கையாளுதல் நிறுவன ஊழியர்களின் பங்கு என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் அமைச்சகம் எழுப்பியிருந்தது.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியாவுக்கு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தற்போது சம்பவத்தில் நேரடியாக தவறு செய்ததாக அடையாளம் காணப்பட்ட ஏர் இந்தியா ஊழியர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P