Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில், அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மூன்று மாதங்களாக காடுபட்டி கிராமத்தில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்காததால் தெருக்களில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி நிற்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், சாலைகள் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், அன்றாடப் பணிகளுக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர்
அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறினர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO), கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து, கிராமத்திற்குள் நேரடியாகச் சென்று சாக்கடை நீர் தேங்கியுள்ள தெருக்கள், மழைநீர் வடியாத பகுதிகள் மற்றும் மோசமான சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிப்புகளைச் சரிசெய்யும் பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.
இருப்பினும், ஊராட்சி செயலாளர் அலட்சியத்தால் தொடர்ந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதி இன்றி சிரமப்பட்டு வருவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
இல்லையெனில், கிராம மக்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் கூறினர்
Hindusthan Samachar / Durai.J