17 நாட்களுக்குப் பிறகு மாணவன் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
மதுரை, 22 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த 7-ம் தேதி மாயமான நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதர் குட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கூடல்புதூர் க
பலி


மதுரை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த 7-ம் தேதி மாயமான நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதர் குட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவனின் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 'தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டமைப்பு' சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் உறவினர்கள் மற்றும் அமைப்பினர் ஈடுபட்டனர். மேலும், கடந்த 16 நாட்களாக மாணவனின் உடலை பெற்றுக்கொள்ளாமல் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், குடும்பச் சூழல் காரணமாக உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்து காவல்துறையினரிடம் இன்று கடிதம் வழங்கினர்.

இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வனின் உடல், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் மூலம் ஒப்படைக்கப்பட்டது.

உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் மற்றும் கூட்டமைப்பினர், ராஜாஜி மருத்துவமனையில் இருந்து வைகை ஆறு தரைப்பாலம் வரை ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழ்ச்செல்வனின் உடல், அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் குச்சிலியம்பாறை அருகே உள்ள பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து கூட்டமைப்பைச் சேர்ந்த மகாலட்சுமி கூறுகையில்,

காவல்துறையின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாததால் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடும் என்ற நம்பிக்கையிலும், குடும்பத்தினரின் சூழலை கருத்தில் கொண்டும் உடலை பெற்றுக்கொண்டோம். உடலை பெற்றுக்கொண்டாலும், சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகளை கைது செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

ஆட்சியர் அலுவலக முற்றுகையின்போது எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P