மானாமதுரை ஆகாஷ் காவல் மரண வழக்கு -6 காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
சிவகங்கை, 22 செப்டம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் கு
ஆகாஷ்


சிவகங்கை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல் ஆய்வாளர் திலீபன் உள்ளிட்ட 6 பேர் இன்று சிவகங்கை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

திலீபன், குகன், தெய்வேந்திரன், காளீஸ்வரன், மகேந்திரன், பழனி ஆகிய 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், நீதிமன்ற வளாகத்தில் ஏடிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சிபிசிஐடி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற நீதிமன்ற ஆஜர் நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றது.

வழக்கில் தொடர்புடைய 6 பேரும் 20 நாட்களுக்குள் தலா ரூ.20 ஆயிரம் தொகையுடன் இரண்டு ஜாமீன் தாரர்கள் மூலம் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.

மேலும், வரும் அக்டோபர் 9-ஆம் தேதி அனைவரும் தவறாமல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, தற்போது 6 பேரும் காவலர்கள் என்ற அடிப்படையில் அல்லாமல், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்ற நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam