Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
குடிநீருக்கு இணையான முக்கியத்துவத்தை மக்கள் பயன்பாட்டிற்குரிய சாலைகளும் பெற்றுள்ளன என்றார்.
அரசு தொடர்ந்து சாலைத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், சாலைப் பாதுகாப்பில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலை விபத்துகளால் 88 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாமக்கல் - திருச்சி போன்ற வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் பாடல்களை அலறவிட்டுக்கொண்டு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்வது அவர்களின் தவறு மட்டுமல்லாமல், சிஸ்டத்தில் முறையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவராத நமது நிர்வாகத்தின் தவறுமாகும் என்றார்.
இதனைத் தடுக்கும் விதமாக, அடுத்த மூன்று மாதங்களில் 76 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் கண்காணிப்பு வளையம் கொண்டுவரப்படும் என அறிவித்தார்.
குறைந்த செலவில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமின்றி குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும் பெரிதும் உதவும்.
மேலும், நாற்பத்தையாயிரத்து நூற்று முப்பத்தொன்பது கிலோமீட்டர் அளவிலான மாவட்டச் சாலைகள் உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட்டுச் சீரமைக்கப்பட உள்ளன.
முக்கிய உள்கட்டமைப்புத் திட்டமாக, சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கடற்பாலம் (Sea Link) அமைக்கும் புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சென்னையில் பெருநகர மாநகராட்சி வசமிருந்த பல சாலைகள் தற்போது நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய மழைக்காலம் முடிந்து அடுத்த ஓராண்டுக்குள் சென்னையின் சாலைகள் மிகச் சிறந்த தரமான சாலைகளாக மாற்றப்பட வேண்டும் என்று பொறியாளர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார்.
மத்திய அரசிடமிருந்து அதிக நிதி ஒதுக்கீடு பெறும் துறைகளில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையும் ஒன்று என்பதால், தேவையான நிதியைப் பெற்று மக்கள் பயன்பாட்டுக்கான பணிகளைத் தடையின்றி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / Durai.J