Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 22 செப்டம்பர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,
திருச்சி மாவட்டத்தில் 590 பள்ளிகளில் பயிலும் 63 ஆயிரத்து 157 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ்,
கோவில் நிலத்தை போலிப் பத்திரம் மூலம் பதிவு செய்ததாக திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு திட்டமிட்டு பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறுவது உண்மையானால், ஏன் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தன்னை விமர்சித்துப் பேசியதற்கு பதிலளித்த அவர், கும்பாபிஷேக விழாவில் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால், விஐபி தரிசன வழியில் செல்ல வேண்டியிருந்ததாகக் கூறினார்.
மேலும், சாதாரண நாட்களில் விஐபி தரிசன வழியில் செல்வதையும், கும்பாபிஷேக நாளில் அந்த வழியைப் பயன்படுத்துவதையும் ஒப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து பாடல் பாடுவதாக விமர்சித்து வருவதாகக் கூறிய அமைச்சர், உதயநிதி சட்டப்பேரவைக்கு வந்து வகுப்பைக் கவனித்தால் யார் அமைச்சர், யார் சட்டமன்ற உறுப்பினர் என்பது தெரியும் என்றும், ஆனால் அவர் வகுப்பைத் தவிர்த்து விடுவதால் அவ்வாறு தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிக் கொடுத்ததை உதயநிதி ஒவ்வொரு மேடையாகச் சென்று நடித்து வருவதாகவும் அமைச்சர் ரமேஷ் குற்றம்
சாட்டினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam