வடகிழக்கு பருவமழை, டெங்கு தடுப்பு குறித்து 2-வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் இன்று 2-வது நாளாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய
CM Vijay


சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் இன்று 2-வது நாளாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்

மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்று, தங்களது மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ஆலோசனையில் காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்ற நிலையில், இன்று 10 மாவட்ட ஆட்சியர்களுடன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களும் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.

மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றுதல், வீடுதோறும் கள ஆய்வு நடத்துதல், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / ANANDHAN