Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது குறிப்பாக இந்த பகுதியில் உள்ள முல்லை பெரியார் பாசன கால்வாய் திண்டுக்கல் மாவட்டம் பேரணை முதல் மேலூர் அருகே கள்ளந்திரி வரை சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு பயன்படக்கூடியது வருடம் தோறும் ஜூன் மாசம் 2 ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் முல்லைப் பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு முதல் போக நெல் சாகுபடிக்கு முழுவதும் பயன்பட்டு வரும் அதனைத் தொடர்ந்து இரண்டாம் போகமும் நெல் சாகுபடி செய்து விவசாயிகள் கடந்த காலங்களில் நெல் விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடும் வறட்சி காரணமாகவும் போதிய மழையும் பெய்யாததால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 120 அடிக்கும் கீழே குறைந்து காணப்படுகிறது.
இதனால் விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் திறக்க முடியாத நிலையில் ஜூன் மாசம் திறக்க வேண்டிய தண்ணீர் திறக்கவில்லை இதனால் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் கள்ளந்திரி வரை செல்லக்கூடிய முல்லைப் பெரியார் பாசன கால்வாய் மூலம் பயன்படும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது.
பின்னர் இரண்டாம் போகத்திற்காவது குறைந்த அளவு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையும் நீர்ப்பாசன பிடிப்பு பகுதிகளில் பொய்யாததால் தற்போது வரை முல்லை பெரியார் பாசன கால்வாயில் தண்ணீர் வராமல் வறட்சியாக காணப்படுகிறது.
இதன் காரணமாக இரண்டாம் போக நெல் விவசாயமும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது ஏற்கனவே சென்ற ஆண்டு விவசாயத்திற்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு விவசாயமும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விவசாயத்திற்கு திறக்கும் தண்ணீர் ஆனது குடிநீர் தேவைக்கும் பயன்பட்டு வந்த நிலையில் தண்ணீர் வராததால் தற்போது குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை ஒருபுறமும் விவசாயம் செய்ய முடியாமல் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிலங்களை விற்க வேண்டிய தர்ம சங்கடமான நிலை மறுபுறமும் என விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.
ஏற்கனவே வாங்கிய கடனை கட்ட வங்கிகள் வற்புறுத்தி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர் ஆகையால் விவசாயிகள் வாங்கிய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் மேலும் பெரியார் பாசன கால்வாய் மூலம் இரண்டு போக சாகுபடியும் பொய்த்து போன நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மதுரை மாவட்டத்தை முழுவதும் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மின்சார பற்றாக்குறை காரணமாகவும் விவசாயம் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போதிய அளவில் பயன்படுத்த முடியவில்லை என விவசாயிகள் தரப்பில் கவலை தெரிவித்துள்ளனர்
Hindusthan Samachar / Durai.J