Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் கடந்த 18-ந்தேதி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் சாதி ரீதியிலான பதிவுகள் வெளியிட்டது தொடர்பாக தகராறில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த சந்திப்பு போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்கள் சுமார் 20 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
மறுநாள் அவர்களது பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கினர். தொடர்ந்து மாணவர்கள் மோதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயதுடைய 10 மாணவர்களை போலீசார் கைது செய்து சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மாணவர்களான நெல்லை டவுன் கோட்டையடி தெருவை சேர்ந்த முருகன் மகன் மாரிசெல்வம் (வயது 18), டவுனை அடுத்த வெட்டுவான்குளத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (18), தாழையூத்தை சேர்ந்த சந்தோஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN