திருநெல்வேலியில் நகை மதிப்பீட்டாளரை காரில் கடத்திய 6 பேரை கைது செய்து விசாரணை
திருநெல்வேலி, 22 செப்டம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த அனீஸ் (29), அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை வ.உ.சி. தெருவைச் சேர்ந்த முருகன் மகன்
Nellai Town Police Station


திருநெல்வேலி, 22 செப்டம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த அனீஸ் (29), அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை வ.உ.சி. தெருவைச் சேர்ந்த முருகன் மகன் செல்வக்குமார் (46), அனீஸை தொடர்பு கொண்டு, தனக்குச் சொந்தமான 33 கிராம் தங்க நகையை வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அந்த நகையை மீட்டு விற்று பணம் தருமாறும் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அனீஸ் அந்த நகையை மீட்டு விற்பனை செய்து, அதற்கான கடன் தொகையை கழித்த பின்னர் மீதமிருந்த பணத்தை செல்வக்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நகையின் மதிப்பு உயர்ந்துவிட்டதாகக் கூறிய செல்வக்குமார், தனக்கு கூடுதல் பணம் வேண்டும் என அனீஸிடம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

பின்னர் இது தொடர்பாக பேசுவதற்காக திருநெல்வேலி நகரம் உழவர் சந்தை அருகே வருமாறு அனீஸை அழைத்துள்ளார்.

அங்கு வந்த அனீஸை செல்வக்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கி காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி நகரம் போலீசார், குருநாதன் கோயில் அருகே காரை வழிமறித்து அனீஸை மீட்டனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வக்குமார், பாளையங்கோட்டையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (27), மகாராஜா சுதர்சன் (24), விஜயன் (24), பழவூரைச் சேர்ந்த சுரேஷ் (28), கோமு (28) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN