பெருங்களத்தூரில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்-டெங்கு பரவும் அபாயம்
சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட புது பெருங்களத்தூர், வார்டு-57 சேகர் நகர் 1-வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோ
_


சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட புது பெருங்களத்தூர், வார்டு-57 சேகர் நகர் 1-வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த

150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இக்குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பது தீராத பிரச்சினையாக உள்ளது.

இரவு நேரங்களில் பெய்து வரும் மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புக்குள் புகுந்து தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன்,டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய், காமாட்சி நகர் 4-வது தெரு வழியாக சென்று பிரதான வடிகாலில் கலக்கிறது.

ஆனால் வடிகாலின் சரிவு மற்றும் நீர் செல்லும் தடம் சரியாக இல்லாததால் தொடர்ந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது.

இதனால் தரைதள பகுதிகள் மற்றும் குடிநீர் ஆழ்துளை கிணறுகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இது குறித்து பலமுறை தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி குடியிருப்பு பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது தாம்பரம் மாநகராட்சியின் கூடுதல் பொறுப்பில் உள்ள ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா உடனடியாக நடவடிக்கை எடுத்து, தொழில்நுட்ப ரீதியான நிரந்தர வடிகால் தீர்வை வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு பருவமழையின் போதும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் தங்களின் நீண்டகால பிரச்சினைக்கு இந்த முறையாவது நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்

Hindusthan Samachar / Durai.J