அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் மேற்கூரையிலிருந்து மழைநீர் கசிவு
அலங்காநல்லூர், 22 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மழை பெய்யும் நேரங்களில் கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து மழைநீர் கசிந்து மருத்துவமனையின் உட்புறங்களில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
க


அலங்காநல்லூர், 22 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மழை பெய்யும் நேரங்களில் கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து மழைநீர் கசிந்து மருத்துவமனையின் உட்புறங்களில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு முக்கியமான மருத்துவ சேவை வழங்கி வரும் இந்த அரசு மருத்துவமனையில், மழைக்காலங்களில் மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகுவதால் மருத்துவமனைக்குள் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையின் பழுதடைந்த மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே கசிந்து, தரையில் குளம்போல் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தரைப்பகுதி வழுக்கும் தன்மைக்கு மாறி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வழுக்கி கீழே விழும் அபாயம் நிலவுகிறது.

குறிப்பாக மழை பெய்யும் நேரங்களில் மருத்துவமனையின் உட்புற பகுதிகளில் மேற்கூரையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

பிரசவத்திற்காகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் இரவு நேரங்களில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அந்த நேரங்களில் மேற்கூரையிலிருந்து மழைநீர் கசிந்து தரையில் தேங்கியிருப்பதால், வழுக்கும் தரையில் நடந்து செல்வது கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கர்ப்பிணிப் பெண்கள் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாகவும், இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஊசி மற்றும் மருந்துகள் வைக்கப்படும் அறைகளிலும் மேற்கூரையிலிருந்து மழைநீர் கசிந்து வருவதாக கூறப்படுகிறது. மருந்துகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளின் அருகிலும் தண்ணீர் விழுவதால், மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மருந்துகள் மற்றும் ஊசிகள் பாதுகாப்பான, சுகாதாரமான சூழலில் வைக்கப்பட வேண்டிய நிலையில், மேற்கூரையிலிருந்து மழைநீர் கசிந்து வரும் நிலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மருத்துவமனையின் பழுதடைந்த மேற்கூரையை முழுமையாக ஆய்வு செய்து, மழைநீர் கசிவு ஏற்படும் பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மருத்துவமனையின் கட்டடத்தின் தற்போதைய நிலையை சுகாதாரத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் நேரில் ஆய்வு செய்து, நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையான பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்

Hindusthan Samachar / Durai.J