சிவகங்கை இரட்டை கொலை வழக்கு - மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்
சிவகங்கை, 22 செப்டம்பர் (ஹி.ச.) சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாய் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டி ஆகிய இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நட
கொலை


சிவகங்கை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாய் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டி ஆகிய இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே 16 வயது சிறுவன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கூத்தாண்டன் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாண்டி, மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த வினோத்குமார் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் மதுரை மாவட்டம் கொடிக்குளம் அரும்பனூரைச் சேர்ந்த வேலாயுதம் ஆகிய இருவரும் இன்று சிவகங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொடிக்காடு கண்மாய் பகுதியில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, எதிர்தரப்பினரை தாக்குவதற்காக ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டி ஆகியோரை எதிர்தரப்பினர் என தவறாக அடையாளம் கண்டு, அவர்களை வெட்டிக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டைக் கொலைக்குப் பின்னர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு சுகாதாரத் துறையில் தற்காலிகப் பணி வழங்கப்பட்டது.

தற்போது மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், இந்த வழக்கில் கைது மற்றும் சரணடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கு திட்டமிட்டவர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam