Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் நல வாரியத்தை மறுசீரமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தும் வகையில், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகள் மற்றும் அறிவிப்புகளை ஒருங்கிணைத்து புதிய உறுப்பினர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு டிசம்பர் 1, 2022-ம் ஆண்டு பிப்ரவரி 23 மற்றும் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆகிய தேதிகளில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளின் அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய அமைப்பின்படி, பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படுகிறது.
இதில் அலுவல்சார் உறுப்பினர்களாக 8 பேரும், அலுவல்சாரா உறுப்பினர்களாக 9 பேரும் என மொத்தம் 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.
வாரியத்தின் தலைவராக மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் செயல்படுவார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அலுவல்சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவல்சாரா உறுப்பினர்களாக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். பத்திரிகையாளர்களின் நலன், நலத்திட்ட உதவிகள் மற்றும் அவர்களுக்கான பல்வேறு நல நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் இந்த வாரியம் செயல்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 செப்டம்பர் 11-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அரசாணை, பத்திரிகையாளர்கள் நல வாரியத்தின் புதிய அமைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN