Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 22 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த பாலமூரு மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூராலா அணைக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமாரிடம் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, பாலமூரு மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் வறட்சி நிலவுவதாகவும், ஜூராலா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு ஜூராலா அணைக்கு 5 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கு சிவகுமார் சாதகமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ரேவந்த் ரெட்டியின் அறிவுறுத்தலின்பேரில் மந்திரிகள் ஜூபள்ளி கிருஷ்ணாராவ், ஸ்ரீஹரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பண்ட்லா கிருஷ்ணமோகன் ரெட்டி, மேகா ரெட்டி, ஜி.மதுசூதன் ரெட்டி ஆகியோர் ரேவந்த் ரெட்டி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி உத்தம்குமார் ரெட்டியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர்கள் பெங்களூரு சென்று கர்நாடக முதல்-மந்திரி சிவகுமாரை சந்திக்க உள்ளனர். அப்போது, ஜூராலாவுக்கு தண்ணீர் திறக்க சாதகமாக பதில் அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், 5 டி.எம்.சி. தண்ணீரையும் ஒரே நேரத்தில் திறக்காமல், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கட்டம் கட்டமாக திறந்துவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்க உள்ளனர்.
இதற்கிடையே, ஜூராலா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பி.ஆர்.எஸ். கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
பா.ஜ.க.வும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
இதனால் ஜூராலா அணைக்கு தண்ணீர் திறப்பது தொடர்பான விவகாரம் தெலுங்கானாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA