தூத்துக்குடியில் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் கைது - ஆதரவாளர்கள் சாலை மறியல்
தூத்துக்குடி, 22 செப்டம்பர் (ஹி.ச.) தூத்துக்குடியில் பிரபல நகைக்கடை நிறுவனத்தின் உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படும் புகாரில், பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கிராஜாவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை தூத்துக்குடி
இசக்கி ராஜா


தூத்துக்குடி, 22 செப்டம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடியில் பிரபல நகைக்கடை நிறுவனத்தின் உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படும் புகாரில், பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கிராஜாவை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இசக்கிராஜாவை அக்டோபர் 6ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவரது கைதைக் கண்டித்து பசும்பொன் மக்கள் கட்சி ஆதரவாளர்கள் தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு திரண்டனர். கைது நடவடிக்கையை கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நீதிமன்றம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஒரு கட்டத்தில் கைகலப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

திருநெல்வேலி, தென்காசி, சிவகாசி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆதரவாளர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam