Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில், உயர்கல்வித் துறையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழா கோவை எட்டிமடையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ஜெ. காந்திராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டாக்டர் ஏ. சேவியர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார்.
பல்வேறு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற பேராசிரியர்களின் அர்ப்பணிப்பான பணிகளைப் பாராட்டி, உயர்கல்வி வளர்ச்சி மற்றும் மாணவர் சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத் தலைவர் கே. வேலு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஓய்வுபெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி கௌரவித்தார்.
பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் கே. விஜயராணி, ஏஐஎப்யூசிடிஓ முன்னாள் தேசியச் செயலாளரும், சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பி. ஜெயகாந்தி, முன்னாள் செயலாளர் பேராசிரியர் உ. மு. ரவிச்சந்திரன் மற்றும் எம்யூடிஏ அமைப்பைச் சேர்ந்த பி. சிவஞானம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் டாக்டர் எம். கிருஷ்ணராஜ் ஏற்புரையாற்றினார்.
முடிவில், பொருளாளர் டாக்டர் ஜெ. சார்லஸ் நன்றியுரை கூறினார்.
இவ்விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற சங்கத்தின் மத்திய செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பின்வரும் முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
பணி மேம்பாட்டிற்கான, பணப்பலன்களை உடனடியாகப் பேராசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தில் சேர்த்து வழங்கிட வேண்டும்.
எம்.பில் மற்றும் பிஎச்.டி முடித்த ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.
இவ்விழா மற்றும் கூட்டத்தில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J