உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குள் ஆசிரியை சுட்டுக்கொலை- மாணவர்கள் கண்முன்னே நடந்த கொடூரம்
உத்திரப்பிரதேசம், 22 செப்டம்பர் (ஹி.ச) உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில் 26 வயதான நிஷாத் பாத்திமா ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவரும் 27 வயதான முகமது சவுத்தும் காதலித்து வந்ததாகவும், சமீபத்தில்
கொலை


உத்திரப்பிரதேசம், 22 செப்டம்பர் (ஹி.ச)

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில் 26 வயதான நிஷாத் பாத்திமா ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

அவரும் 27 வயதான முகமது சவுத்தும் காதலித்து வந்ததாகவும், சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாத்திமா காதலை முறித்துக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் சென்ற முகமது சவுத், பாத்திமாவை சந்தித்து பேசுவதற்காக அழைத்துள்ளார். பின்னர் அவரை பள்ளியின் மேல் தளத்தில் உள்ள நடைபாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாத்திமாவை சுட்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் பாத்திமா கீழே விழுந்த நிலையில், முகமது சவுத் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், சவுத் பாத்திமாவின் கையைப் பிடித்து மேல் தளத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பள்ளிக்குள் துப்பாக்கியுடன் சவுத் நுழைந்தது எப்படி, பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam