வாலாஜாபேட்டையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்- கொசு மருந்து தெளிப்பு, குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்
ராணிப்பேட்டை, 22 செப்டம்பர் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னெ
புகை


ராணிப்பேட்டை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நகராட்சி ஆணையாளர் மேகலா தலைமையில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து கொசு மருந்து தெளித்தல், புகை அடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், குடியிருப்பு பகுதிகள், தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, தேவையான இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டு வருகிறது.

மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகள் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, கொசுக்கள் பெருகுவதற்கு ஏதுவாக உள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

டெங்கு தடுப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என வலியுறுத்தியுள்ள நகராட்சி நிர்வாகம், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், குப்பைகளை திறந்தவெளியில் கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்றும், காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam