Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
80-களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த சகோதரிகளான நடிகைகள் அம்பிகா - ராதா இடையே ஏற்பட்டுள்ள சொத்து தகராறு தற்போது காவல் நிலைய புகார் வரை சென்றுள்ளது.
தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் ஆகியோர் இணைந்து தனது கையெழுத்திட்ட பழைய காசோலைகளை திருடி சுமார் 46 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக சென்னை வளசரவாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா,
தனது தரப்பு விளக்கத்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அம்பிகா, சகோதரி ராதா அளித்த புகார் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக கூறினார்.
சொத்து தகராறை தீர்ப்பதற்காகவே அந்த காசோலைகளை ராதா தான் தனக்கு கொடுத்ததாகவும், அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய பிறகு அதை நிறுத்தியதும் ராதாவே தான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
உண்மையிலேயே இந்த விவகாரத்தில் ஏமாந்து போனது தான்தான் என்றும், தான்தான் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அம்பிகா வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் பெரும் சர்ச்சைக்குள்ளான ஏ.ஆர்.எஸ் கார்டன் சொத்து குறித்த வதந்திகளுக்கும் அம்பிகா முற்றுப்புள்ளி வைத்தார்.
ஏ.ஆர்.எஸ் கார்டன் எம்.ஜி.ஆர் கொடுத்தது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்றார்.
அந்த சொத்து தங்களது உழைப்பில் வாங்கியது என்றும், தங்களது குடும்பம் வாங்கிய முதல் சொத்து அதுதான் என்றும் கூறினார்.
தங்களது தாயார் மூலமாக தேவர் பிலிம்ஸ் குடும்பத்தினரிடமிருந்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுத்து அந்த சொத்தை வாங்கியதாக அவர் விளக்கம் அளித்தார்.
அந்த சொத்தில் தனக்கும் பங்கு உள்ளதாகவும், அது தனது உயிர் போன்றது என்றும் கண்ணீருடன் கூறினார்.
தனது ஏ.ஆர்.எஸ் கார்டன் பெயர் பலகை அகற்றப்பட்டு வேறு பெயர் வைக்கப்பட்டதை பார்த்த போது தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் உருக்கமாக தெரிவித்தார்.
சொத்து தகராறு மட்டுமின்றி தனது தங்க நகைகள் குறித்தும் அம்பிகா பேசினார். தன்னுடைய தங்கம் நிறைய தனது சகோதரி ராதாவிடம் உள்ளதாகவும், தங்கம் என்றாலே தனது தங்கைக்கு வீக்னஸ் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடும்பத்தில் பந்தம், பாசம், நன்றி போன்றவை மறைந்து எல்லாமே பணம் என்றாகிவிட்டதாக வேதனை தெரிவித்த அம்பிகா, ஏ.ஆர்.எஸ் கார்டன் விற்பனைக்கு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
நடிகை ராதா தரப்பில், வளசரவாக்கம் வீட்டில் இருந்த கையெழுத்திட்ட பழைய காசோலைகள் திருடப்பட்டு அம்பிகாவின் வங்கி கணக்கில் 46 கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் மாறுபட்ட விளக்கங்கள் இருப்பதால், காவல்துறை விசாரணைக்கு பிறகே உண்மை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b