Enter your Email Address to subscribe to our newsletters

மதனப்பள்ளி , 23 செப்டம்பர் (ஹி.ச.)
பல ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் ராயலசீமா பகுதியை ஹார்ட்டிகல்ச்சர் எனப்படும் தோட்டக்கலை மண்டலமாக மாற்றுவதற்காக ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் பிரமாண்ட திட்டத்தை செயல்படுத்த ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற அக்டோபர் 2-ந் தேதி மதனப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் இணைந்து ஹார்ட்டிகல்ச்சர் ஹப் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மத்திய அரசின் ‘பூர்வோதயா’ திட்டத்தின் கீழ் ரூ.40 ஆயிரம் கோடி நிதி கிடைக்க உள்ளது. மேலும் ரூ.60 ஆயிரம் கோடி தனியார் முதலீடு மூலம் திரட்டப்பட உள்ளது.
ராயலசீமாவின் 4 ஒருங்கிணைந்த மாவட்டங்களுடன் பிரகாசம், நெல்லூர் மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றி விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை வழங்குவதுடன், தோட்டக்கலை பயிர் சாகுபடியை ஊக்குவித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட ராயலசீமா பகுதியில் விவசாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்க உள்ள ‘இந்தியன் ஸ்கூல் ஆப் அகரிகல்ச்சர்’ நிறுவனத்துக்கும் அக்டோபர் 2-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
வேளாண்மை தொடர்பான உயர்தர கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்கும் வகையில் இந்த நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.
சந்திரபாபு 5 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகள்
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகிற 29-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
29-ந் தேதி விஜயவாடாவில் நடைபெறும் கர்மயோகி மிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், பிற்பகல் நெல்லூர் மாவட்டம் உதயகிரியில் நடைபெறும் ‘பல்லெ பண்டுகா’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
30-ந் தேதி விஜயவாடாவில் 24 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
அக்டோபர் 1-ந் தேதி மாநிலம் முழுவதும் நடைபெறும் ‘ஏழைகளின் சேவையில்’ நிகழ்ச்சியில் பங்கேற்று ஓய்வூதியம் வழங்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
அக்டோபர் 2-ந் தேதி மதனப்பள்ளியில் ஹார்ட்டிகல்ச்சர் ஹப் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், விஜயவாடாவில் நடைபெறும் ‘ஸ்வர்ண ஆந்திரா-ஸ்வச்ச ஆந்திரா’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அக்டோபர் 3-ந் தேதி விஜயவாடாவில் நடைபெறும் பான் ஐ.ஐ.டி. மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA