ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு - விசாரணையை முடிக்க 3 மாதம் அவகாசம் கோரும் சிபிஐ
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது இல்லம் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு - விசாரணையை முடிக்க 3 மாதம் அவகாசம் கோரும் சிபிஐ


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது இல்லம் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் புலன் விசாரணை நிலை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் பலர் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதாலும், குற்றச்சதி, ஆயுதங்கள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆழமாக விசாரிக்க வேண்டியுள்ளதாலும், விசாரணையை முழுமையாக முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் மூன்று மாத கால அவகாசம் தேவை எனவும் சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் ஜாமீனை ரத்து செய்து அவர்களை மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைக்க வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபடும் வாய்ப்பு இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பு வழக்கறிஞர், தங்கள் தரப்பினர் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும், இதுவரை எந்த ஒரு சாட்சியையும் கலைக்க முற்படவில்லை என்றும், சாட்சியங்களை கலைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் வாதிட்டார்.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தமிழக அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சிபிஐ தரப்பு கோரியுள்ள கூடுதல் அவகாசம் குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்ததுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / vidya.b